test2


எல்லாம் சிவமயம்
வேலும் மயிலும் துணை
திருச்சிற்றம்பலம்


வள்ளி மணாளன் அட்சரமாலை
விநாயகர் காப்பு
ராகம் : நாட்டை

பள்ளியிலுறையும் பிள்ளாய் பணிந்தேனுனையே வலமாய்
புள்ளி மயிலேறி புவனமதை நொடியில் வலமாய் வந்த
வள்ளி மணாளன் அட்சர மாலையையோதியுய்ந்திடயெமக்கு
அள்ளி தாரும் ஞானமும் சொல்லும் நல்லபடியே.


பள்ளியில் உறையும் பிள்ளாய் பணிந்தேன் உனையே வலமாய்
புள்ளி மயில் ஏறி புவனம் அதை நொடியில் வலமாய் வந்த
வள்ளி மணாளன் அட்சர மாலையை ஓதி உய்ந்திட எமக்கு
அள்ளி தாரும் ஞானமும் சொல்லும் நல்ல படியே.



(கருத்துரை) கல்வி அறிவும் வித்தையும், கலைகளும் போதிக்கும் இடமாகிய
பள்ளியில் முதலாவதாக இருக்கும் பிள்ளையாராகிய விநாயகப் பெருமானே!
உனைப்பணிந்து வலமாய் வந்தேன். அன்று புள்ளி மயில் ஏறி உலகை ஓர்
இமை பொழுதில் வலம் வந்த, வள்ளியின் மணவாளனாகிய முருகப் பெருமானின் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தொகுத்த, அட்சரமாலை என்னும் நூலைப் படித்து, பாடி, நற்கதி அடைந்திட எனக்கு ஞானமும் சொற்களும் வாரி வழங்கிட அருளினைத் தருவாய் (என்றவாறு)


நூல்

ராகம் : ஹம்ஸத்வனி

அகர உகர மகர வடிவாகிய சோதியே வள்ளிமணாளனே!
சிகரயுருவாய் நின்ற சூரனை சேவலும் மயிலுமாய்
தகரயயிலை கடாவி வசமாக்கி தனி பேற்றை யருளிய
புகர புங்கவ! காவாய் பொன்னொளிர் ஆதியே.1


அகர உகர மகர வடிவு ஆகிய சோதியே வள்ளிமணாளனே!
சிகர உருவாய் நின்ற சூரனை சேவலும் மயிலுமாய்
தகர அயிலை கடாவி வசம் ஆக்கி தனி பேற்றை அருளிய
புகர புங்கவ காவாய் பொன் ஒளிர் ஆதியே.

(க-ரை) அகரம், உகரம், மகரம் எனும் எழுத்துக்களை உள்ளடக்கிய 'ஓம்'' எனும் பிரணவ மந்திர வடிவாகிய சோதி ஒளிக்கு ஒப்பான வள்ளிக்கு மணவாளனே! உயர்ந்த புள்ளிகளையுடைய மயில் வாகனா! பொன்னைப் போன்று ஒளி வீசக் கூடிய மூலப் பரம் பொருளே! மலையின் உச்சிக்கு நிகராக உயர்ந்து நின்ற சூர பதுமனை தகரம் என்று சொல்லக் கூடிய வேலாயுதத்தால் ஏவி இரு பாகமாகச் செய்து சேவலும் மயிலுமாக தன் வசம் கொண்டு நல்ல தனி பேற்றினை அருளியவனே! எனையும் காத்து அருள்வாய். (எ-று)




ஆதி முதனாளிலரனார் நுதலிலுதித்த வள்ளிமணாளனே!

மேதினியிலிது தகுமோ யெமை நோக்காதிருத்தல்

போதியாயினி யோர் சொற்புனிதா! குமரா! நீயும்

சோதியாய் தோன்றி காவாயினி மூத்த இபமுடனே. 2




ஆதி முதல் நாளில் அரனார் நுதலில் உதித்த வள்ளி மணாளனே!

மேதினியில் இது தகுமோ எமை நோக்காது இருத்தல்

போதியாய் இனி ஓர் சொல் புனிதா! குமரா! நீயும்

சோதியாய் தோன்றி காவாய் இனி மூத்த இபம் உடனே.




(க-ரை) எல்லாவற்றிற்கும் மூலமும் முதலுமாய் இருக்கக் கூடிய பரம் பொருளாகிய சிவபெருமான் நெற்றியில் அன்று தோன்றிய வள்ளிக்கு வாய்த்தவனே! உலகினில் எனை பார்க்காதிருப்பது உமது தன்மையோ? அல்லது அழகோ! சொல்வாய் குமரா! புனிதத் தன்மை வாய்ந்தவனே! நீயும் மூத்தவனாகிய விநாயகப் பெருமானுடன் சேர்ந்து சுடரென பிரகாசித்து இனியேனும் எமக்கு ஓர் உபதேசச் சொல்லினைக் கூறி காத்து அருள்வாய். (எ-று)

Comments